Friday, June 24, 2016

கண்கள் இரண்டிலொன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ

கடந்த ஒரு வாரமாக நான் செம வெட்டி. வரிசையாக படங்களாய் பார்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறேன். அதில் என்னை நெகடிவாக பாதித்தது 'இறைவி' படமும் 'ஒரு நாள் கூத்து' என்ற படமும். 

இறைவி எடுத்துக் கொண்டால் பெண்கள் ஆண்களிடம் சிக்கித் தவிக்கும் பழைய கதையை புதிய கோணத்தில் சொல்லுகிறார்கள். ஆனால் பாலச்சந்தர் படங்களில் வரும் பெண்களுக்குரிய துணிச்சலோ சுய புத்தியோ இல்லாத மிக சராசரியான பெண்கள். குடிப்பது, அடிப்பது, காம கோப தாபங்களில் மிருகத்தனமாக நடந்து கொள்வது என்று வாழும் சில ஆண்கள். அவர்களை மணந்த காரணத்தினால் சின்னாபின்னமாய் போகும் சில பெண்கள்.
அதிலும் SJ Surya பாத்திரம் மிக மோசம். ஒரு கலைஞன் என்றால் அவன் எவ்வளவு கீழ்தரமானவனாக இருந்தாலும் பரவாயில்லை என்று டைரக்டர் நினைத்திருப்பார் போலும். படத்தில் அனைவர் வாழ்க்கையும் சிதைந்து போவதற்கு காரணம் SJ சூர்யாவின் பாத்திரத்தால் தான். படு சுயநலமான கதாபாத்திரம்.
உடைந்த மனிதர்கள் உடைந்தவர்களாவே வாழ்ந்து முடிப்பதைக் காட்டுவது தான் இறைவி. அவர்கள் மீண்டு வாழ்க்கையில் வென்று காமிப்பதாக ஒரு முடிவு வைத்திருந்தால் திருப்தியாக இருந்திருக்கும். என்ன செய்வது... கண்ணீர், இரத்தம், குடி மற்றும் வயிற்றைப் பிசையும் வன்முறை இவை அனைத்தும் சேர்ந்து இருள் சூழ்ந்த சினிமா எடுத்தால் தான் தேசிய விருது தருகிறார்கள்!

ஒரு நாள் கூத்து படத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக மூன்று பெண்கள் படும் அவஸ்த்தையை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இங்கேயும் அந்த டைரக்டருக்கு வித்தியாசமான கிளைமாக்ஸ் அமைக்க வேண்டும் என்ற ஆசையின் விளைவு - முடிவு மகா சொதப்பல்! குடும்ப மற்றும் சமூக வழக்கங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க திருமண வயதில் இருக்கும் பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்து நொந்து போவதற்கு சான்ஸ் அதிகம்.

இதெல்லாம் போதாதென்று இந்த சல்மான் கான் கமெண்ட் வேறு. இரத்தம் கொதிக்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட ஆண் கர்வம் ஆட் டிப் படைப்பதைப் பார்த்தால் பதைக்கிறது. அது போன்றவர்களை ஆதரிப்பவரைப் பார்த்தால்... சரி விடுங்கள். No bad words.
காலப் போக்கில் எல்லாம் மாறி ஒரு நல்ல சமுதாயம் உருவாகும் என்று நம்புவோம். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.

Wednesday, January 06, 2016

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

நான் வளர்ந்தது எல்லாம் கல்கத்தாவில் தான் . பள்ளி செல்லும் அந்த பருவத்தில், அக்டோபர் மாதம் எப்பொழுது வரும் என்று காத்திருப்பேன். அக்டோபரில் இருந்து ஜனவரி இறுதி வரை பல பண்டிகைகளும், அந்த குதூகலத்தோடு பள்ளி விடுமுறைகள் வேறு அதிகம் இருக்க ஒரே கொண்டாட்டம் தான்.

கல்கத்தாவில் கோலாகலமாக கொண்டாடப் படும் துர்கா பூஜை பெரும்பாலும் அக்டோபரில் தான் ஆரம்பிக்கும். எங்கள் பள்ளி மஹாளய அம்மாவாசையில் இருந்தே விடுமுறை விட்டுவிடுவர். அப்புறம் என்ன? ஆயிரக்கணக்கான பந்தல்களில் நம்மை சுண்டி இழுக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற சில பந்தல்களை விடிய விடிய சுற்றுவதும், அங்கு திரளும் திருவிழா கூட்டத்தோடு கூட்டமாக ஆரவாரம் செய்வதும், மைதானங்களில் ராட்டினங்கள் போன்ற கேளிக்கை சமாச்சாரங்களில் உற்சாகமாக விளையாடுவதுமாக அமர்களமாக இருக்கும். இது போக சில தமிழ் நண்பர்கள் வீட்டில் கொலு பார்க்கப் போவதும் உண்டு. சங்கரா ஹால் என்ற இடத்தில் , சாரதா தேவி அம்மனுக்கு ஒன்பது நாட்களில் ஒன்பது வித அலங்காரம் செய்வார்கள். அதில் மிச்ச நாட்களில் போக வில்லை என்றால் கூட, காய்கறி மற்றும் பழ வகைகள் கொண்டு செய்யப்படும் சாகம்பரி அலங்காரம் கட்டாயம் மிஸ் பண்ணாமல் போய் விடுவேன். அவ்வளவு பிடிக்கும்.

ஒரு வழியாக பள்ளி மீண்டும் திறந்தால், உடனே  தீபாவளி / காளி பூஜை வந்துவிடும். அப்புறம்? ரிப்பீட்டு!

மீண்டும் சகஜமாகும் வேளையில் அடியேனின் பிறந்த நாள் வைபோகம் வந்து விடும். Date of birth வைத்து ஒரு முறை, நட்சத்திரப் படி ஒரு முறை என்று அரசியல்வாதி போல் கூத்தடித்து முடிக்கும் தருவாயில் winter vacation நெருங்கி விடும். நாங்கள் வசித்த அபார்ட்மெண்டில் புது வருட கொண்டாட்டத்திற்கான வேலைகள் தொடங்கி விடுவார்கள் . ப்ரோக்ராம் practice என்ற பெயரில்  நண்டு சிண்டுகளோடு சேர்ந்து ஒரு வாரம் பட்டையைக் கிளப்புவோம். இது பத்தாது என்று டிசம்பர் கடைசியில் சாஸ்தா ப்ரீதி ஒன்று எங்கள் வீட்டருகில் மிக விமரிசையாக நடக்கும் (அதைப் பற்றி விலாவரியாக வேறு பதிவில் சொல்கிறேன்).

ஜனவரி மாதம் பள்ளி திறந்தாற் போல் இருக்கும். உடனே பொங்கல். மூன்று நாள் அவுட். அதே மாதம் நேதாஜி பிறந்த நாள் முடிந்து, பின் குடியரசு தினத்தோடு விடுமுறைகள் முற்றுப்புள்ளிக்கு வரும். February மாதம் முதல் ஏதோ தியாகி போல் பள்ளி செல்லத் தொடங்குவேன்!

இப்போ எதற்கு இந்த கதை என்கிறீர்களா? தொலைக்காட்சி ஆக்கிரமிப்பு இல்லாத அந்த பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களின்  சுகமான நினைவுகளப்  பகிர வேண்டுமென்று தோன்றியது... மேலும், இப்படி எல்லாம் கதை பேசியாவது இந்த வலைப் பதிவை active ஆக வைக்கலாம்னு தான்!


 

Sunday, November 08, 2015

மீண்டும் நான் !

வணக்கம் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆசைதான்.  ஆனால் யாருமில்லாத கடையில் யாருக்காக டீ ஆத்துவது? சரி விஷயத்துக்கு வரேன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இந்தப் பக்கமே வரவில்லை. காரணம் என்று யோசித்தால் இதுதான் என்று ஒன்று கூட தோன்றவில்லை. அத்தியாவசியமான விஷயங்களுக்கே நேரமில்லாது போன நிலையில் , எழுதுவது என்பது ஒரு ஆடம்பரம் போல் ஆகி விட அப்படியே விட்டு விட்டேன். இன்று ஏனோ தெரியவில்லை... மனதில் ஒரு இனம் புரியாத சஞ்சலம். எழுத வேண்டும் என்ற எண்ணமும் அடிக்கடி வந்து போக, மீண்டும் இங்கு காலடி எடுத்து வைத்துள்ளேன்.

என்னதான் நடக்குதுன்னு பாப்போம். இந்த தடவையாவது தொடர்ந்து எழுத முடிஞ்சா சந்தோஷம்தான்.
யாரவது தப்பித் தவறி இந்த பக்கம் வந்து இத படிச்சீங்கன்னா உங்கள்ளுக்கு ஒரு ஹலோ மற்றும் நன்றி.
இனி அடிக்கடி எழுதுவேன். நம்பிக்கைதான் வாழ்க்கை. :)

அடுத்த பதிவில் மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து (யாருமில்லாத கடையில் .....!) விடை பெறுவது உங்கள் குறும்புக்காரி.

Sunday, January 23, 2011

ஓடி விளையாடாதே பாப்பா

ஊர்ல இருக்கற ஒரு வண்டி அவஸ்தை எல்லாம் பட்டுட்டு மறுபடியும் இந்த வலை உலகம் பக்கம் வந்ததுல ஒரு மகிழ்ச்சி. நிம்மதி. Atleast something feels normal. கடந்த நாலு  மாசத்துல, ஏதாவது ஒரு பகிர்ந்துகொள்ளத்தக்க நிகழ்ச்சி நடக்கும் போதெல்லாம், அடடா இப்பொழுது இதைப் பற்றி எழுத முடியவில்லையே என்ற ஒரு சின்ன யோசனை வரும். அப்படி ஒரு விஷயத்தைப் பற்றி தான் இப்போது பேசப் போகிறேன்.

எனக்கு இந்த சின்னக் குழந்தைகளை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் அவ்வளவாக உடன்பாடு கிடையாது. பார்வையாளர்களை கவர்வதற்காக என்று அவர்கள் செய்யும் கண் துடைப்பு நாடகங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது அந்த குழந்தைகள் தான். ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ நடக்கும் கூத்து என்றால் கூட மன்னித்துவிடலாம். ஆனால், மாதக் கணக்கில் (சில சமயம் ஒரு முழு வருடத்திற்கு) நீட்டிக்கப்படும் இந்த நிகழ்சிகளில் அடி வாங்குவது குழந்தைகளின் சகஜ வாழ்கையும் அப்பாவித்தனமும் தான். A terrible price to pay for a little bit glory. அம்மாடி ஆத்தாடி, மன்மத ராசா ரகப் பாடல்களை குழந்தைகள் பாடினாலோ அல்லது அவற்றிற்கு ஏற்ப உடம்பை வளைத்து நடனம் ஆடினாலோ, பார்ப்பதற்கே  கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஒரு பிரபல தனியார் தமிழ் சேனலில் சென்ற வருடம் குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்குபெற்று மிகவும் பிரபலமானான் ஒரு சிறுவன். சுமாராகத்தான் பாடுவான் என்றாலும் அவன் சுட்டித்தனத்தால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தான். அவனால் TRP உயர வாய்ப்பு உள்ளதை உணர்ந்த அந்த சேனலும் அவனை Eliminate செய்யாமல் finals வரை போட்டியாளராக வைத்திருந்தார்கள். எனக்கு தெரிந்த ஒருவரின் உறவினரின் குழந்தை அந்தப் போட்டியில் கலந்து கொண்டதால், மேற்கூறிய சிறுவனை பற்றி சில தகவல்கள் தெரிய வந்தது. அந்த சிறுவனின் பெற்றோர் படு strict டாம். ஸ்டுடியோவில் மற்ற குழந்தைகளுடன் அவன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தால் அடித்து இழுத்து வந்து விடுவார்களாம். கேட்டால் குரல் கெட்டு விடும் என்பார்களாம். வீட்டிலும் அவனுக்கு நல்ல அடி உதை விழுமாம், ஒழுங்காக practise  செய்ய வில்லை என்றால். நடுவில் அவன் almost Eliminate ஆகக் கூடிய ஒரு stage வரும் பொழுது, அவனது அப்பா அந்த சேனல் கூட ஒரே சண்டையாம். தன் மகனுக்கு நல்ல demand இருப்பதாகவும், சரியான முறையில் அவர்களை நடத்த வில்லை என்றால் அச்சேனலின்  போட்டி சேனலுக்கு சென்று விடுவதகாவும் மிரட்டி இருக்கிறார்.அவனால் TRP ஏறும் என்பதை நன்கு உணர்ந்து இருந்த அந்த சேனல், அவனை Eliminate செய்வதை நிறுத்தியதோடு மட்டும் இல்லாமல் , பல "special gifts" உம் கொடுத்து, அந்த பையனைத் தக்க வைத்துக் கொண்டதாம்.

கேட்கவே ஒரே கொடுமையாக இல்லை? child labour laws இந்த மாதிரி விஷயங்களில் வேலை செய்வதில்லையா என்ன? சந்தர்ப்ப சூழ்நிலைகள் மோசமாக அமைந்து வேறு வழியில்லாமல் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி பிழைப்பது பிழை என்றால், மேற்கூறிய உதாரணங்களைப் போல் இருக்கும் பெற்றோரை என்ன செய்வது? ஒரு வேளை அசுரத்தனமான போட்டி இருக்கும் இந்த உலகத்தில், நம் முத்திரையை பதிக்க வேண்டும் என்றால் இப்படி எதாவது செய்தால் தான் முடியுமா?  அல்லது இந்த சிறுவன் வளர்ந்து பெரியவனாகி, ஒரு நல்ல கலைஞனாக வந்து, "என் வளர்ச்சிக்கு அப்பா அம்மா தான் காரணம்" என்று சொல்லி, நம்மை மாறி புலம்பும் ரகத்தை முட்டளாக்கிச் செல்வானோ? ஒன்றும் புரியவில்லை போங்கள்!

Friday, July 23, 2010

Hotel saa"paadu"

எனக்கும் என்னவருக்கும்  அடிக்கடி  ஹோட்டல்களில்   சாப்பிடுவது பிடிக்கும். அதுவும் அவருக்கு வித விதமான ஹோட்டல்களுக்கு  சென்று ஒரு வெட்டு வெட்டுவதென்றால் கொள்ளை இஷ்டம். (அதாவது, இதற்கும் என் "சமையல்" திறனுக்கும் சம்பந்தம் கிடையாது. ப்ளீஸ், அதப் பத்தி எதுவும் கேக்கப் ப்டாது.)
என்னதான் பல ஹோட்டல்களுக்கு போனாலும் அவர் விரும்பி சாப்பிடுவது   என்னவோ, ஜெயின் டால் fry யும் , சாதமும், அப்பளமும், உருளைக்  கிழங்கும் தான். எனக்கு இந்த பந்தா பரமேஸ்வர ஹோட்டல்களை(ஸ்டார் ஹோட்டல்) கண்டாலே அலர்ஜி. இந்த ஸ்பூன் அண்ட் போர்க் எல்லாம் வெச்சு, சாப்பாட்டைக் குத்தி கொலை பண்ணி உள்ளே தள்ளுவது எல்லாம் நமக்கு சரி படாத விஷயம். கடைசியில் ஒரு கிண்ணத்தில் வெந்நீரை வைத்து அதில் ஒரு வெட்டிய எலுமிச்சையை போட்டு அதில் கை அலம்புவது என்பது என்னால் ஏத்துக்கொள்ளவே முடியாது. நேர போய் குழாயில் கை அலம்பி விட்டு வந்துவிடலாம் என்று போகும் போதெல்லாம் வாஷ் பேசின்  கிட்டே மானம் போகும். ஒவ்வொரு  ஹோட்டலிலும்  இந்த வாஷ் பேசின்  குழாய் ஒரு விதமாக டிசைன் செய்யப் பட்டிருக்கும். ஒன்று வலப்பக்கம் திருப்பினால் தண்ணீர் வரும். மற்றொன்றில் இடப்பக்கம் திருப்ப வேண்டும். ஒன்றில் knob ஐ மேலே தூக்க வேண்டும். இன்னொரு இடத்தில கீழே. சில இடங்களில் கையை வெறுமனே குழாய்க்கு நேரே நீட்டினால் போதும். தண்ணீர் வரும். இப்படி, கொஞ்சம் மானம் போய், ஓரளுவுக்கு விஷயம் தெரிந்து கொண்டு, கொஞ்சம் தைரியமாக ஒருமுறை வாஷ் பேசின் ஏரியாவுக்கு போனால்,  பாழாய்  போனவன், வாஷ் பேசினுக்கு  அடியில் காலால் அமுக்கி use பண்ணுவது போல் knob வைத்திருக்கிறான்.

So, போன வாரம் என் கணவர்  என்னிடம் வந்து, "இந்த பக்கம் ஒரு புதிய ஸ்டார்  ஹோட்டல்(நம்ப ஸ்டைலில் பந்தா பரமேஸ்வர ஹோட்டல்) ஒன்று இருக்கிறது,   continental food நன்றாக இருக்கிறதாம், try பண்ணலாம் வா", என்ற போது எனக்கு பக்கென்றது.  நாம் முதல் முதலாக சந்தித்தது இந்த நாளில தான்,  3 வருடங்களுக்கு முன்பு ,  அதை celebrate பண்ணுவதற்கு தான் என்று ஒரு சாக்கு வேறு. (சாப்பாடு விஷயம்னு வந்தால் வேண்டாததை எல்லாம் கொண்டாட தோன்றும்!)
மனதில் பக்கென்று இருந்தாலும், இட்லி தோசை என்று அரைத்த மாவையே அரைக்க வேண்டாமென்று, நானும் ஒத்துக் கொண்டேன். அங்கே போனால், Recipe யில்  ஒரு பேர் கூட வாயில் நுழைவேனா  என்கிறது. கொஞ்சம் ஆராய்ச்சி  செய்து, ஒரு சூப் பிக் பண்ணி, one by two  என்றோம். Waiter , இங்கு one by two  கொடுக்க மாட்டோம் என்றார். சரி, அதற்கும் மேலே மூக்கை உடைத்துக் கொள்ள வேண்டாம் என்று ரெண்டு சூப் ஆர்டர் செய்தோம்.  கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, main  course  ஆர்டர் செய்தோம்.  சூப், அவ்வளவாக ரசிக்க வில்லை. மெயின் கோர்ஸ் ஒரே காமெடி. சின்ன மூன்று மாடி கட்டிடம் போல என்னத்தையோ கொண்டு வந்து வைத்தனர். ஒரு ஒரு லெவலிலும்  ஒரு டிஷ். எல்லாம், நம்ம ஊரு, பஜ்ஜி, போண்டா மற்றும் இந்த nachos வகைகள். அப்புறம் ஏதோ சிவப்பு நிறத்தில் கொஞ்சம் சாதம், பனீர். எல்லாம் சுமாராக இருந்தது. ஒரு வழியாக வந்த வேலையை முடித்து, 900 ரூபாய்க்கு தண்டம் அழுதுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

நேற்று, வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு குஜராத்தி உணவகத்துக்குச் சென்றோம்.
ரெண்டு Thaali மீல்ஸ் ஆர்டர் செய்தோம். ஒரு தாலியில் என்னவெல்லாம் இருந்தது தெரியுமா?  Vegetable salad, அப்பளம்,  கட்லெட், ரெண்டு வகை சட்னி, தயிர் வடை,   நான்கு வகை சப்ஜி (கத்திரி, வெண்டை, உருளை, கொண்டைகடலை), டால், அடை மாதிரி ஒரு item, சப்பாத்தி, பூரி, கடி(மோர் குழம்பு மாதிரி ஒரு item), rabri, கிச்சடி / சாதம், ஜல்ஜீரா, மோர். அனைத்தும், unlimited. பிரமாதமான ருசி.  சிறிதும் முகம் கோணாமல், பார்த்து பார்த்து பரிமாறினார்கள். சந்தோஷமாக சாப்பிட்டு முடித்து, கிளம்பும் வேளையில், வெற்றிலை எடுத்துக் கொள்ள மறந்துவிட்டோமே என்று, கூப்பிட்டு  கொடுத்தார்கள்... சரி, ஒரு Thaali meals என்ன விலை தெரியுமா? வெறும் நூறு ரூபாய் தான். வயிறும், மனதும் நிரம்பி, மகிழ்ச்சியாக வீடு வந்து சேர்ந்தோம்.

பேருக்கு இந்த generation என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், பழக்க வழக்கம் எல்லாம் அப்படியே அம்மா காலத்து ஸ்டைல்ல தான் இருக்கு. பரவாயில்ல.. எனக்கு என்னமோ இது தாங்க பிடிச்சிருக்கு.

Tuesday, June 29, 2010

erichalgal

1. இந்த பொம்மீஸ் நைட்டீஸ் விளம்பரம். என்ன பாத்ததில்லையா?  தேவயானி  வருவாங்களே.. அவங்கள குடும்பத் தலைவியா உணர வைப்பதே இந்த பொம்மீஸ்  நைட்டீஸ்தாங்கற ரேஞ்சுக்கு ஒரு டயலாக். You Tube ல அந்த ad தேடி பாத்தேன். கிடைக்கல (நல்ல காலம் போல உங்களுக்கு!). ஆனா எனக்கு அந்த link கெடச்சதும் கட்டாயம் பகிர்ந்து கொள்கிறேன். After all, யான் பெற்ற இன்பம் பெற வேண்டாமா இவ்வையகம்?

2. இதோ சில வாக்கியங்கள்:
"தங்கலை எப்படி உனர்ந்து கொல்லுகின்றன....... "  (தங்களை எப்படி உணர்ந்து கொள்கின்றன....")  
"தமிளன் இளந்து விட்ட பன்பாடுகலை...."   (தமிழன் இழந்து விட்ட பண்பாடுகளை...")
மேற்கூறிய பொன்வரிகள் பேசப்பட்ட இடம் : கோவை  செம்மொழி மாநாட்டுலதான்.

3. உண்மையான திறமை இருப்பவர்களை எல்லாம் eliminate செய்து விட்டு, நிறைய டிராமா செய்து, TRP க்கு உதவுபவர்களுக்குத்தான் பல reality show க்களில் title வழங்குகிறார்கள். இதே மாதிரியான ப்ரோக்ராம்கள் அக்காலத்தில் இருந்திருந்தால்  ஜானகி, சித்ரா, எஸ்.பி.பி ஆகியோர், முதல் சில சுற்றுக்களிலேயே தோற்று போய் இருப்பார்களோ என்று தோன்றுகிறது.

4. இரட்டை அர்த்த வசனங்களையே பெரும்பாலும் பின்பற்றும் சில நகைச்சுவை(?) நடிகர்கள்.

5. பெரிதாக ஒன்றும் சாதிக்காதவர்கள் எல்லாம் மாபெரும் மேதைகள் போல சில நிகழ்ச்சிகளில் பேசுவதும், அறிவுரை வழங்குவதும்.

இன்னும் பல எரிச்சல்கள் இருக்கு. இப்போதைக்கு இது போதும்னு நிறுத்திக்கிறேன்.

பின்குறிப்பு : தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விட்டால் இந்த எல்லா எரிச்சல்களும் போய் விடுமே என்று எனக்கு அறிவுரை சொல்ல நினைப்பவர்கள் தயவு செஞ்சு ஓடி போயிடுங்க, சொல்லிட்டேன்... ஆமாம். 

Thursday, June 24, 2010

Vanakkam

வலைப்பூ உலகத்திற்கு ஒரு வணக்கம். இப்போ நான் ஏன் ப்ளாக் எழுத வந்தேன்னு கொஞ்சம் சொல்றேன். இந்த பிரெண்ட்ஸ் பிரெண்ட்ஸ்னு சொல்லிக்கறாங்களே, அவங்க ரொம்ப மோசம். ஏதாவது ஒரு சந்தோஷமோ, சோகமோ, அவங்க கூட பகிர்ந்துக்கலாம்னு பார்த்தா ஓவரா பிஸியா இருக்காங்க பா ... அதான் எதா இருந்தாலும் இங்க வந்து கொட்டி தீர்த்துடலாம் பாருங்க. போக அப்படியே கொஞ்சம் டைம் பாஸ் பண்ணிட்டு, மத்த வலை பதிவாளர்கள் எழுதுவதை ரசித்து, இந்த virtual உலகத்தில் நம்ப தடத்தையும் விட்டுட்டு போலாம்னுதான். சில பதிவுகள் குறும்பாகவும், சிலவை கொஞ்சம் "சீரியஸ்" டைப்பாகவும் இருக்கும். சிலவை நல்ல தமிழிலும், சிலவை தற்கால உரைநடை தமிழிலும் இருக்கும். உங்கள் கருத்துக்களையும், ஆரோக்யமான விமர்சனங்களையும் எப்போதும் வரவேற்க காத்திருக்கும் குறும்புக்காரி.