Friday, June 24, 2016

கண்கள் இரண்டிலொன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ

கடந்த ஒரு வாரமாக நான் செம வெட்டி. வரிசையாக படங்களாய் பார்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறேன். அதில் என்னை நெகடிவாக பாதித்தது 'இறைவி' படமும் 'ஒரு நாள் கூத்து' என்ற படமும். 

இறைவி எடுத்துக் கொண்டால் பெண்கள் ஆண்களிடம் சிக்கித் தவிக்கும் பழைய கதையை புதிய கோணத்தில் சொல்லுகிறார்கள். ஆனால் பாலச்சந்தர் படங்களில் வரும் பெண்களுக்குரிய துணிச்சலோ சுய புத்தியோ இல்லாத மிக சராசரியான பெண்கள். குடிப்பது, அடிப்பது, காம கோப தாபங்களில் மிருகத்தனமாக நடந்து கொள்வது என்று வாழும் சில ஆண்கள். அவர்களை மணந்த காரணத்தினால் சின்னாபின்னமாய் போகும் சில பெண்கள்.
அதிலும் SJ Surya பாத்திரம் மிக மோசம். ஒரு கலைஞன் என்றால் அவன் எவ்வளவு கீழ்தரமானவனாக இருந்தாலும் பரவாயில்லை என்று டைரக்டர் நினைத்திருப்பார் போலும். படத்தில் அனைவர் வாழ்க்கையும் சிதைந்து போவதற்கு காரணம் SJ சூர்யாவின் பாத்திரத்தால் தான். படு சுயநலமான கதாபாத்திரம்.
உடைந்த மனிதர்கள் உடைந்தவர்களாவே வாழ்ந்து முடிப்பதைக் காட்டுவது தான் இறைவி. அவர்கள் மீண்டு வாழ்க்கையில் வென்று காமிப்பதாக ஒரு முடிவு வைத்திருந்தால் திருப்தியாக இருந்திருக்கும். என்ன செய்வது... கண்ணீர், இரத்தம், குடி மற்றும் வயிற்றைப் பிசையும் வன்முறை இவை அனைத்தும் சேர்ந்து இருள் சூழ்ந்த சினிமா எடுத்தால் தான் தேசிய விருது தருகிறார்கள்!

ஒரு நாள் கூத்து படத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக மூன்று பெண்கள் படும் அவஸ்த்தையை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இங்கேயும் அந்த டைரக்டருக்கு வித்தியாசமான கிளைமாக்ஸ் அமைக்க வேண்டும் என்ற ஆசையின் விளைவு - முடிவு மகா சொதப்பல்! குடும்ப மற்றும் சமூக வழக்கங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க திருமண வயதில் இருக்கும் பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்து நொந்து போவதற்கு சான்ஸ் அதிகம்.

இதெல்லாம் போதாதென்று இந்த சல்மான் கான் கமெண்ட் வேறு. இரத்தம் கொதிக்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட ஆண் கர்வம் ஆட் டிப் படைப்பதைப் பார்த்தால் பதைக்கிறது. அது போன்றவர்களை ஆதரிப்பவரைப் பார்த்தால்... சரி விடுங்கள். No bad words.
காலப் போக்கில் எல்லாம் மாறி ஒரு நல்ல சமுதாயம் உருவாகும் என்று நம்புவோம். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.

Wednesday, January 06, 2016

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

நான் வளர்ந்தது எல்லாம் கல்கத்தாவில் தான் . பள்ளி செல்லும் அந்த பருவத்தில், அக்டோபர் மாதம் எப்பொழுது வரும் என்று காத்திருப்பேன். அக்டோபரில் இருந்து ஜனவரி இறுதி வரை பல பண்டிகைகளும், அந்த குதூகலத்தோடு பள்ளி விடுமுறைகள் வேறு அதிகம் இருக்க ஒரே கொண்டாட்டம் தான்.

கல்கத்தாவில் கோலாகலமாக கொண்டாடப் படும் துர்கா பூஜை பெரும்பாலும் அக்டோபரில் தான் ஆரம்பிக்கும். எங்கள் பள்ளி மஹாளய அம்மாவாசையில் இருந்தே விடுமுறை விட்டுவிடுவர். அப்புறம் என்ன? ஆயிரக்கணக்கான பந்தல்களில் நம்மை சுண்டி இழுக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற சில பந்தல்களை விடிய விடிய சுற்றுவதும், அங்கு திரளும் திருவிழா கூட்டத்தோடு கூட்டமாக ஆரவாரம் செய்வதும், மைதானங்களில் ராட்டினங்கள் போன்ற கேளிக்கை சமாச்சாரங்களில் உற்சாகமாக விளையாடுவதுமாக அமர்களமாக இருக்கும். இது போக சில தமிழ் நண்பர்கள் வீட்டில் கொலு பார்க்கப் போவதும் உண்டு. சங்கரா ஹால் என்ற இடத்தில் , சாரதா தேவி அம்மனுக்கு ஒன்பது நாட்களில் ஒன்பது வித அலங்காரம் செய்வார்கள். அதில் மிச்ச நாட்களில் போக வில்லை என்றால் கூட, காய்கறி மற்றும் பழ வகைகள் கொண்டு செய்யப்படும் சாகம்பரி அலங்காரம் கட்டாயம் மிஸ் பண்ணாமல் போய் விடுவேன். அவ்வளவு பிடிக்கும்.

ஒரு வழியாக பள்ளி மீண்டும் திறந்தால், உடனே  தீபாவளி / காளி பூஜை வந்துவிடும். அப்புறம்? ரிப்பீட்டு!

மீண்டும் சகஜமாகும் வேளையில் அடியேனின் பிறந்த நாள் வைபோகம் வந்து விடும். Date of birth வைத்து ஒரு முறை, நட்சத்திரப் படி ஒரு முறை என்று அரசியல்வாதி போல் கூத்தடித்து முடிக்கும் தருவாயில் winter vacation நெருங்கி விடும். நாங்கள் வசித்த அபார்ட்மெண்டில் புது வருட கொண்டாட்டத்திற்கான வேலைகள் தொடங்கி விடுவார்கள் . ப்ரோக்ராம் practice என்ற பெயரில்  நண்டு சிண்டுகளோடு சேர்ந்து ஒரு வாரம் பட்டையைக் கிளப்புவோம். இது பத்தாது என்று டிசம்பர் கடைசியில் சாஸ்தா ப்ரீதி ஒன்று எங்கள் வீட்டருகில் மிக விமரிசையாக நடக்கும் (அதைப் பற்றி விலாவரியாக வேறு பதிவில் சொல்கிறேன்).

ஜனவரி மாதம் பள்ளி திறந்தாற் போல் இருக்கும். உடனே பொங்கல். மூன்று நாள் அவுட். அதே மாதம் நேதாஜி பிறந்த நாள் முடிந்து, பின் குடியரசு தினத்தோடு விடுமுறைகள் முற்றுப்புள்ளிக்கு வரும். February மாதம் முதல் ஏதோ தியாகி போல் பள்ளி செல்லத் தொடங்குவேன்!

இப்போ எதற்கு இந்த கதை என்கிறீர்களா? தொலைக்காட்சி ஆக்கிரமிப்பு இல்லாத அந்த பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களின்  சுகமான நினைவுகளப்  பகிர வேண்டுமென்று தோன்றியது... மேலும், இப்படி எல்லாம் கதை பேசியாவது இந்த வலைப் பதிவை active ஆக வைக்கலாம்னு தான்!