Wednesday, January 06, 2016

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

நான் வளர்ந்தது எல்லாம் கல்கத்தாவில் தான் . பள்ளி செல்லும் அந்த பருவத்தில், அக்டோபர் மாதம் எப்பொழுது வரும் என்று காத்திருப்பேன். அக்டோபரில் இருந்து ஜனவரி இறுதி வரை பல பண்டிகைகளும், அந்த குதூகலத்தோடு பள்ளி விடுமுறைகள் வேறு அதிகம் இருக்க ஒரே கொண்டாட்டம் தான்.

கல்கத்தாவில் கோலாகலமாக கொண்டாடப் படும் துர்கா பூஜை பெரும்பாலும் அக்டோபரில் தான் ஆரம்பிக்கும். எங்கள் பள்ளி மஹாளய அம்மாவாசையில் இருந்தே விடுமுறை விட்டுவிடுவர். அப்புறம் என்ன? ஆயிரக்கணக்கான பந்தல்களில் நம்மை சுண்டி இழுக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற சில பந்தல்களை விடிய விடிய சுற்றுவதும், அங்கு திரளும் திருவிழா கூட்டத்தோடு கூட்டமாக ஆரவாரம் செய்வதும், மைதானங்களில் ராட்டினங்கள் போன்ற கேளிக்கை சமாச்சாரங்களில் உற்சாகமாக விளையாடுவதுமாக அமர்களமாக இருக்கும். இது போக சில தமிழ் நண்பர்கள் வீட்டில் கொலு பார்க்கப் போவதும் உண்டு. சங்கரா ஹால் என்ற இடத்தில் , சாரதா தேவி அம்மனுக்கு ஒன்பது நாட்களில் ஒன்பது வித அலங்காரம் செய்வார்கள். அதில் மிச்ச நாட்களில் போக வில்லை என்றால் கூட, காய்கறி மற்றும் பழ வகைகள் கொண்டு செய்யப்படும் சாகம்பரி அலங்காரம் கட்டாயம் மிஸ் பண்ணாமல் போய் விடுவேன். அவ்வளவு பிடிக்கும்.

ஒரு வழியாக பள்ளி மீண்டும் திறந்தால், உடனே  தீபாவளி / காளி பூஜை வந்துவிடும். அப்புறம்? ரிப்பீட்டு!

மீண்டும் சகஜமாகும் வேளையில் அடியேனின் பிறந்த நாள் வைபோகம் வந்து விடும். Date of birth வைத்து ஒரு முறை, நட்சத்திரப் படி ஒரு முறை என்று அரசியல்வாதி போல் கூத்தடித்து முடிக்கும் தருவாயில் winter vacation நெருங்கி விடும். நாங்கள் வசித்த அபார்ட்மெண்டில் புது வருட கொண்டாட்டத்திற்கான வேலைகள் தொடங்கி விடுவார்கள் . ப்ரோக்ராம் practice என்ற பெயரில்  நண்டு சிண்டுகளோடு சேர்ந்து ஒரு வாரம் பட்டையைக் கிளப்புவோம். இது பத்தாது என்று டிசம்பர் கடைசியில் சாஸ்தா ப்ரீதி ஒன்று எங்கள் வீட்டருகில் மிக விமரிசையாக நடக்கும் (அதைப் பற்றி விலாவரியாக வேறு பதிவில் சொல்கிறேன்).

ஜனவரி மாதம் பள்ளி திறந்தாற் போல் இருக்கும். உடனே பொங்கல். மூன்று நாள் அவுட். அதே மாதம் நேதாஜி பிறந்த நாள் முடிந்து, பின் குடியரசு தினத்தோடு விடுமுறைகள் முற்றுப்புள்ளிக்கு வரும். February மாதம் முதல் ஏதோ தியாகி போல் பள்ளி செல்லத் தொடங்குவேன்!

இப்போ எதற்கு இந்த கதை என்கிறீர்களா? தொலைக்காட்சி ஆக்கிரமிப்பு இல்லாத அந்த பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களின்  சுகமான நினைவுகளப்  பகிர வேண்டுமென்று தோன்றியது... மேலும், இப்படி எல்லாம் கதை பேசியாவது இந்த வலைப் பதிவை active ஆக வைக்கலாம்னு தான்!


 

No comments:

Post a Comment