Friday, July 23, 2010

Hotel saa"paadu"

எனக்கும் என்னவருக்கும்  அடிக்கடி  ஹோட்டல்களில்   சாப்பிடுவது பிடிக்கும். அதுவும் அவருக்கு வித விதமான ஹோட்டல்களுக்கு  சென்று ஒரு வெட்டு வெட்டுவதென்றால் கொள்ளை இஷ்டம். (அதாவது, இதற்கும் என் "சமையல்" திறனுக்கும் சம்பந்தம் கிடையாது. ப்ளீஸ், அதப் பத்தி எதுவும் கேக்கப் ப்டாது.)
என்னதான் பல ஹோட்டல்களுக்கு போனாலும் அவர் விரும்பி சாப்பிடுவது   என்னவோ, ஜெயின் டால் fry யும் , சாதமும், அப்பளமும், உருளைக்  கிழங்கும் தான். எனக்கு இந்த பந்தா பரமேஸ்வர ஹோட்டல்களை(ஸ்டார் ஹோட்டல்) கண்டாலே அலர்ஜி. இந்த ஸ்பூன் அண்ட் போர்க் எல்லாம் வெச்சு, சாப்பாட்டைக் குத்தி கொலை பண்ணி உள்ளே தள்ளுவது எல்லாம் நமக்கு சரி படாத விஷயம். கடைசியில் ஒரு கிண்ணத்தில் வெந்நீரை வைத்து அதில் ஒரு வெட்டிய எலுமிச்சையை போட்டு அதில் கை அலம்புவது என்பது என்னால் ஏத்துக்கொள்ளவே முடியாது. நேர போய் குழாயில் கை அலம்பி விட்டு வந்துவிடலாம் என்று போகும் போதெல்லாம் வாஷ் பேசின்  கிட்டே மானம் போகும். ஒவ்வொரு  ஹோட்டலிலும்  இந்த வாஷ் பேசின்  குழாய் ஒரு விதமாக டிசைன் செய்யப் பட்டிருக்கும். ஒன்று வலப்பக்கம் திருப்பினால் தண்ணீர் வரும். மற்றொன்றில் இடப்பக்கம் திருப்ப வேண்டும். ஒன்றில் knob ஐ மேலே தூக்க வேண்டும். இன்னொரு இடத்தில கீழே. சில இடங்களில் கையை வெறுமனே குழாய்க்கு நேரே நீட்டினால் போதும். தண்ணீர் வரும். இப்படி, கொஞ்சம் மானம் போய், ஓரளுவுக்கு விஷயம் தெரிந்து கொண்டு, கொஞ்சம் தைரியமாக ஒருமுறை வாஷ் பேசின் ஏரியாவுக்கு போனால்,  பாழாய்  போனவன், வாஷ் பேசினுக்கு  அடியில் காலால் அமுக்கி use பண்ணுவது போல் knob வைத்திருக்கிறான்.

So, போன வாரம் என் கணவர்  என்னிடம் வந்து, "இந்த பக்கம் ஒரு புதிய ஸ்டார்  ஹோட்டல்(நம்ப ஸ்டைலில் பந்தா பரமேஸ்வர ஹோட்டல்) ஒன்று இருக்கிறது,   continental food நன்றாக இருக்கிறதாம், try பண்ணலாம் வா", என்ற போது எனக்கு பக்கென்றது.  நாம் முதல் முதலாக சந்தித்தது இந்த நாளில தான்,  3 வருடங்களுக்கு முன்பு ,  அதை celebrate பண்ணுவதற்கு தான் என்று ஒரு சாக்கு வேறு. (சாப்பாடு விஷயம்னு வந்தால் வேண்டாததை எல்லாம் கொண்டாட தோன்றும்!)
மனதில் பக்கென்று இருந்தாலும், இட்லி தோசை என்று அரைத்த மாவையே அரைக்க வேண்டாமென்று, நானும் ஒத்துக் கொண்டேன். அங்கே போனால், Recipe யில்  ஒரு பேர் கூட வாயில் நுழைவேனா  என்கிறது. கொஞ்சம் ஆராய்ச்சி  செய்து, ஒரு சூப் பிக் பண்ணி, one by two  என்றோம். Waiter , இங்கு one by two  கொடுக்க மாட்டோம் என்றார். சரி, அதற்கும் மேலே மூக்கை உடைத்துக் கொள்ள வேண்டாம் என்று ரெண்டு சூப் ஆர்டர் செய்தோம்.  கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, main  course  ஆர்டர் செய்தோம்.  சூப், அவ்வளவாக ரசிக்க வில்லை. மெயின் கோர்ஸ் ஒரே காமெடி. சின்ன மூன்று மாடி கட்டிடம் போல என்னத்தையோ கொண்டு வந்து வைத்தனர். ஒரு ஒரு லெவலிலும்  ஒரு டிஷ். எல்லாம், நம்ம ஊரு, பஜ்ஜி, போண்டா மற்றும் இந்த nachos வகைகள். அப்புறம் ஏதோ சிவப்பு நிறத்தில் கொஞ்சம் சாதம், பனீர். எல்லாம் சுமாராக இருந்தது. ஒரு வழியாக வந்த வேலையை முடித்து, 900 ரூபாய்க்கு தண்டம் அழுதுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

நேற்று, வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு குஜராத்தி உணவகத்துக்குச் சென்றோம்.
ரெண்டு Thaali மீல்ஸ் ஆர்டர் செய்தோம். ஒரு தாலியில் என்னவெல்லாம் இருந்தது தெரியுமா?  Vegetable salad, அப்பளம்,  கட்லெட், ரெண்டு வகை சட்னி, தயிர் வடை,   நான்கு வகை சப்ஜி (கத்திரி, வெண்டை, உருளை, கொண்டைகடலை), டால், அடை மாதிரி ஒரு item, சப்பாத்தி, பூரி, கடி(மோர் குழம்பு மாதிரி ஒரு item), rabri, கிச்சடி / சாதம், ஜல்ஜீரா, மோர். அனைத்தும், unlimited. பிரமாதமான ருசி.  சிறிதும் முகம் கோணாமல், பார்த்து பார்த்து பரிமாறினார்கள். சந்தோஷமாக சாப்பிட்டு முடித்து, கிளம்பும் வேளையில், வெற்றிலை எடுத்துக் கொள்ள மறந்துவிட்டோமே என்று, கூப்பிட்டு  கொடுத்தார்கள்... சரி, ஒரு Thaali meals என்ன விலை தெரியுமா? வெறும் நூறு ரூபாய் தான். வயிறும், மனதும் நிரம்பி, மகிழ்ச்சியாக வீடு வந்து சேர்ந்தோம்.

பேருக்கு இந்த generation என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், பழக்க வழக்கம் எல்லாம் அப்படியே அம்மா காலத்து ஸ்டைல்ல தான் இருக்கு. பரவாயில்ல.. எனக்கு என்னமோ இது தாங்க பிடிச்சிருக்கு.

4 comments:

  1. ஆமாம், இந்த ஹோடேல்லே எல்லாம் நம்மளை மாக்கான் ஆக்கறதற்காகவே வித விதமான குழாய் வெப்பாங்க போலிருக்கு. ஒரு ஹோடேல்லே இப்படிதான் வெறுமே குழாய் கீழே கைய காக்டிண்டு காமிச்சிண்டு நின்னின்டிருன்தேனா, அங்கே குழாயை திருப்பணும் போலிருக்கு. ஒரு ஆள் வந்து நம்மளை ஒரு மாதிரியா பாத்துட்டு குழாயை தெறந்து கை அலம்பிண்டு போனாரா எனக்கு மானமே போய்டுத்து.
    அப்புறம் நெறைய பைசா புடுங்கற ஹோட்டல் எல்லாம் ambience குதான் பைசா வாங்கறா. food சுமாராதான் இருக்கு. நூறு ரூபாய்க்கு இத்தனை விஷயம் unlimited ஆ குடுக்கற எடம் எங்கே இருக்கு. பேரு சொல்லக் கூடாதா.
    நீங்க சென்னைவாசியா அப்டீன்னா marriot ஹோடேல்லே buffet லஞ்ச் ட்ரை பண்ணி பாருங்கோ. Value for money .
    எனக்கும் இந்த முருகன் இட்லி கடை மாதிரி எடங்கள்தான் புடிக்கும். ஆனா அவா கொஞ்சம் hygiene விஷயத்துலே அலட்சியமா இருக்காளோன்னு தோணறது.
    அப்புறம் ஒரு friend சொன்னா, இந்த அறுசுவை ஹோடேல்லே கல்யாண சாப்பாடே 60 ரூபாய்க்கு கெடைக்கரதாம்...அடுத்த முறை சென்னை வரும்போது போய் பாக்கணும்.
    என்னிக்கோ ஒரு நாள் வெளிலே போறதே நாம சாதரணமா வீட்டிலே சமைக்காத விஷயங்களை ட்ரை பண்ணலாமேன்னு தோணும்.ஆனா உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்கு அத்தனை பணம் குடுக்கும் பொது வயத்தெரிச்சலா இருக்கும்.

    ReplyDelete
  2. Lol@ kuzhaai incident. enakku nanna puriyaradhu. adhey kashtam evlo thadavai patturuken. Neenga solra ambience vishayam romba sari. Naanga pona hotel la 3 LCD TV vera.. romba thevai paarunga. Apparam andha Gujarathi hotel peru 9Veg. It's in Pune :)
    4 varusham munnadi Marriot la buffet saaptrukken. Neenga sonnadhukappuram, innum oru murai try pannanum nu thonaradhu. Next time when in Chennai, may be. Apparam, 60 roopaiku kalyaana saapada. Adhuvum next time chennai varum podhu "to do" list la sethukkanum. evlo naalachu, nalla namoor kalyana saapadu saaptu.

    ReplyDelete
  3. "பாழாய் போனவன், வாஷ் பேசினுக்கு அடியில் ...." வாய் விட்டு சிரித்தேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  4. Aha. Thank you... konja naala udambu sari illa. adaan blog pakkam thalai kaatala. Hence the delay in replying.

    ReplyDelete